செய்திகள்

நடைபாதை பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட அனுமதி சீட்டு வழங்க ஆலோசனை

Published On 2016-11-06 05:39 GMT   |   Update On 2016-11-06 05:39 GMT
திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது நடைபாதை பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட அனுமதி சீட்டு வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வருகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன பக்தர்கள் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் திருமலைக்கு வருகின்றனர். திவ்ய தரிசனத்துக்கு 20 மணிநேரமும், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரமும் வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனால், பக்தர்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தற்போது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள், ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், பாத யாத்திரையாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன அனுமதி சீட்டில் தரிசன நேரம் குறிப்பிடப்பட உள்ளது. இது, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. நேரம் குறிப்பிடப்பட்ட திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.

Similar News