செய்திகள்

ஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி

Published On 2016-10-28 05:07 GMT   |   Update On 2016-10-28 05:07 GMT
குஜராத் மாநிலம் சூரத்தில் ரூ. 51 கோடி செலவில் ஊழியர்கள் 1260 பேருக்கு கார்களை தீபாவளி பரிசாக வைர வியாபாரி வழங்கினார்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா.

“ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் உலகம் முழுவதும் வைரம் ஏற்றுமதி செய்து வருகிறார்.

வைரம் பட்டை தீட்டும் தொழிலில் புகழ்பெற்ற இவரது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்களை இவர் ஆண்டு தோறும் தேர்வு செய்து, வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் பரிசு வழங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். 200 பேருக்கு வீடு கொடுத்தார்.

இந்த ஆண்டும் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனசாக கொடுக்க முடிவு செய்தார். இந்த பரிசுகளைப் பெற 1660 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 400 பேருக்கு வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. 1260 பேருக்கு கார்களை தீபாவளி போனஸ் பரிசாக வைர வியாபாரி தோலாகியா கொடுத்துள்ளார்.

குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதலா எனும் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சப்ஜி தோலாகியா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். இளம் வயதில் தன் மாமாவிடம் கடன் வாங்கி வைரம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார்.

அந்த தொழிலில் கிடைத்த வருமானம் அவரை கோடீசுவரராக உயர்த்தியது. ஓரளவு வசதிகள் வந்ததில் இருந்து அவர் ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் பரிசு வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு மட்டும் அவர் ரூ.51 கோடிக்கு தீபாவளி போனஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News