செய்திகள்

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

Published On 2016-10-22 09:29 GMT   |   Update On 2016-10-22 09:29 GMT
டெல்லியில் பிரபல மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வார்டில் அதிகாலை 3.35 மணியளவில் தீ பற்றியது. உடனடியாக அங்கிருந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

ஆறு முதல் ஏழு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுவாசக்கருவியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 17 ஆம் தேதி ஒடிசாவில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதில் 24 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு மருத்துவமனைகள் தீ பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் கண்காணிக்கின்றனவா? என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருவது கவனிக்கத்தக்கது.

Similar News