செய்திகள்

துணை முதல்வரை திருமணம் செய்ய 44000 பெண்கள் விருப்பம் : வாட்ஸ் அப் எண்ணுக்கு குவிந்த தகவல்கள்

Published On 2016-10-21 11:18 GMT   |   Update On 2016-10-21 11:18 GMT
துணை முதல்வரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு 44 ஆயிரம் பெண்கள் தகவல்கள் அனுப்பியது அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பாட்னா:

பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் (வயது 26) மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.  அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், தேஜஸ்வி யாதவ், சாலைப் பழுது தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்வதற்காக ஒரு வாட்ஸ் அப் எண் வெளியிட்டிருந்தார்.

அந்த எண்ணுக்கு ஏராளமான தகவல்கள் வந்து குவிந்தன. பொதுமக்கள் தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து புகார்களை அனுப்பியிருப்பதை அறிந்து உற்சாகம் அடைந்தார் தேஜஸ்வி. ஆனால், தகவல்களை படிக்கத் தொடங்கியபோது அவர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். பெரும்பாலான தகவல்கள், அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இளம்பெண்களிடம் இருந்து வந்திருந்தன.

மொத்தம் 47 ஆயிரம் தகவல்கள் வந்துள்ளன. அதில், 3 ஆயிரம் மட்டும் சாலை பழுது தொடர்பான தகவல்கள். மீதமுள்ள 44ஆயிரம் தகவல்கள் இளம்பெண்களிடம் இருந்து வந்தவை. தகவல் அனுப்பிய பெண்களில் பலர், தங்களின் உயரம், நிறம் உள்ளிட்ட  முழு விவரங்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்கள் அனைவரும், தேஜஸ்வியின் சொந்த வாட்ஸ் அப் எண் என தவறாக நினைத்து தங்களது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி தேஜஸ்வியிடம் கேட்டபோது, “எனக்கு திருமணம் ஆகியிருந்தால் இவ்வளவு தகவல்கள் வந்ததற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். நல்லவேளை எனக்கு இன்னம் திருமணம் ஆகவில்லை” என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறினார்.

Similar News