செய்திகள்

சார்க் மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முக்கிய விவாதமாக இருக்க வேண்டும்: இலங்கை பிரதமர் வலியுறுத்தல்

Published On 2016-10-06 02:54 GMT   |   Update On 2016-10-06 02:54 GMT
சார்க் மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினை முக்கிய விவாதமாக இருக்க வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறினார்.
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர் நேற்று காலை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை ரனில் தன்னுடைய மனைவி மைத்ரியுடன் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது:-

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா மட்டுமல்ல, எந்த நாடும் பாதிக்கக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சார்க் கூட்டமைப்புக்கு இனி எதிர்காலமே இல்லாமல் போய் விடும். எனவே இனி நடக்க உள்ள சார்க் மாநாட்டில் இந்த பிரச்சினை முக்கிய விவாதமாக இருக்க வேண்டும். இதை இந்தியா எப்படி கொண்டு செல்கிறது என்பது மிகவும் முக்கியம். இது தவிர வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நாடுகள் செயல்படுவது குறித்தும் சார்க் மாநாட்டில் விவாதிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா-பாகிஸ்தான் இடையே உரசல் அதிகரித்து வருகிறது. பிரச்சினைகளுக்கு போர் தான் நிரந்தர தீர்வு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாகிஸ்தானுடனான பதற்றமான சூழ்நிலையை குறைக்க நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். அது போன்ற நிலை இலங்கையில் இல்லை. அதே சமயம் தற்போதைய பதற்றமான சூழலில் சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடப்பது சரியாக இருக்காது என்பதால் அந்த மாநாட்டை நாங்களும் புறக்கணித்தோம். ஏனெனில் ஒரு காலத்தில் நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோம். எங்களின் சார்க் மாநாடு புறக்கணிப்பு முடிவுக்கு இந்தியா நன்றி தெரிவித்தது.

சீனாவுடன் நாங்கள் பொருளாதார தொடர்பு மட்டுமே வைத்துள்ளோம். ராணுவரீதியான நட்பு கிடையாது. எங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சீனா உதவுகிறது. இதற்காக நாங்கள் எங்களின் எந்த நில உரிமையையும் விட்டுக்கொடுக்கவில்லை.

மீனவர்கள் பிரச்சினை குறித்து நானும், மோடியும் ஏற்கனவே பல முறை பேசி விட்டோம். இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு துறை மந்திரிகளும், மீனவ பிரதிநிதிகளும் சந்தித்து பேசி இனி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News