செய்திகள்

தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து இரோம் சர்மிளா விடுதலை

Published On 2016-10-06 00:35 GMT   |   Update On 2016-10-06 00:35 GMT
இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இரோம் சர்மிளா, தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இம்பால்:

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார்.

உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் சர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். இதையடுத்து 10 ஆயிரம் சொந்தப்பிணையில் இரோம் சர்மிளாவுக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் விடுதலையான இரோம் சர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படைக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவித்து நேற்று இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி இரோம் சர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியே வந்த இரோம் சர்மிளா உக்ருல் மாவட்டத்தில் சில நாட்கள் தங்கி இருந்து மக்களிடையே பேசி வந்தார். தற்போது இம்பால் மேற்கில் உள்ள இஸ்கான் என்ற ஒரு ஆசிரமத்தில் தங்கி வருகிறார்.

Similar News