செய்திகள்

உ.பி.யில் டோனி படத்திற்கு வரிவிலக்கு

Published On 2016-10-01 12:51 GMT   |   Update On 2016-10-01 12:51 GMT
டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியுள்ள ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்திற்கு உத்தர பிரதேச மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் டோனி. இவரது தலைமையில் இந்தியா அணி இரண்டு உலகக் கோப்பைகளை வாங்கி அசத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து இந்திய அணியில் இடம்பிடித்து இவ்வளவு பெரிய புகழுக்குச் சொந்தக்காரரான டோனியின் வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாக உருவானது. இந்தப் படம் இந்தியா முழுவதும் நேற்று வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அனைத்து ரசிகர்களும் சென்று பார்க்கும் வகையில் டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசமும் வரிவிலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டே கூறுகையில் ‘‘உத்தர பிரதேச மாநிலம் வரிவிலக்கு அளித்த செய்தி கேட்டு நாங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளோம். உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

டோனியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்ததைப் பார்க்க எங்களுக்கு அளவுகடந்த உற்சாக உணர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Similar News