செய்திகள்

வருமான வரி சோதனை: தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.வின் கல்வி நிறுவனத்தில் ரூ.43 கோடி பறிமுதல்

Published On 2016-09-29 07:23 GMT   |   Update On 2016-09-29 07:23 GMT
பெங்களூர், தமிழ்நாடு, ஆந்திராவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.வின் கல்வி நிறுவனத்தில் ரூ.43 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
நகரி:

சித்தூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ டி.ஏ. சத்திய பிரபா. இவர் மறைந்த முன்னாள் எம்.பி.யான டி.கே. ஆதிகேசவலு நாயுடுவின் மனைவி ஆவார்.

இவர் பெங்களூரில் வைதேகி மருத்துவ கல்லூரி, மல்லையா மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும் அங்கு நிகர் நிலை பல்கலைக் கழகம் நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் டி.கே. ஆதிகேசவலு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மருத்துவ கல்லூரி சீட்டுகளை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து வருமானவரி துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கடந்த 23-ந்தேதி பெங்களூரில் உள்ள வைதேகி மருத்துவ கல்லூரி, மல்லையா ஆஸ்பத்திரி, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள டி.கே. ஆதிகேசவலு குரூப்புக்கு சொந்தமான கம்பெனிகள், அலுவலகம், வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பெங்களூர் மருத்துவ கல்வி நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.43 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துக்கு கணக்கு வழக்கு எதுவும் இல்லை. இவை அனைத்தும் கறுப்பு பணம் என்பது தெரியவந்தது. 3 நாட்கள் நீடித்த இந்த சோதனையில் ரூ.265 கோடி சொத்து ஆவணங்களும் சிக்கின. இவைகளுக்கு முறையான கணக்கு இல்லை.

மருத்துவ கல்லூரி சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற பணம் மூலம் சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணம்-சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்த வருமானவரிதுறை அதிகாரிகள் கடந்த 13 வருடத்துக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் படி டி.ஏ ஆதிகேசவலு குழுமத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Similar News