செய்திகள்

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக வழக்கு: உத்தரபிரதேசத்தில் நீதிபதி உத்தரவு

Published On 2016-09-27 05:11 GMT   |   Update On 2016-09-27 05:11 GMT
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேசத்தில் நீதிபதி உத்தரவு உத்தரவிட்டுள்ளார்
லக்னோ:

ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து விடுவதால் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை தயாரித்து வெளியிட்டது. நாடெங்கும் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்கள் மிகவும் கை கொடுப்பதாக உள்ளன.

இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வட மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் வதந்தி பரவியது. அன்று முதல் 10 ரூபாய் நாணயத்தை வட மாநிலத்தின் பல பகுதிகளில் வாங்க மறுக்கிறார்கள்.

குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, அரியானாவில் உள்ள கடைக்காரர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள், 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதையடுத்து கடந்த 20-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

10 ரூபாய் நாணயம் செல்லும். அதுபற்றி யாரும் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

என்றாலும் உத்தரப்பிரதேசத்தில் 10 ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள். சமீபத்தில் வாட்ஸ் அப்-பில் பரவிய தகவல்களிலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று புரளி கிளம்பியதால் கடந்த சில தினங்களாக 10 ரூபாய் நாணயங்கள் பரிமாற்றம் முடங்கியது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பில்பிட் மாவட்டத்தில் இந்த புரளி அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து பில்பிட் மாவட்ட மாஜிஸ்திரேட் நேற்று நிருபர்களை அழைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “10 ரூபாய் நாணயம் தேசிய பணமாகும். அதை வாங்க மறுப்பது குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனால் உத்தரபிர தேசத்தில் 10 ரூபாய் நாணயம் மீதான சந்தேகம் மக்களிடையே சற்று குறைந்துள்ளது.

Similar News