செய்திகள்

இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி 2 கோடி டன்னாக உயரும்: மத்திய மந்திரி தகவல்

Published On 2016-09-27 05:02 GMT   |   Update On 2016-09-27 05:02 GMT
பருவமழை நன்றாக பெய்ததால் இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி 2 கோடி டன்னாக உயரும் என்று மத்திய விவசாயத்துறை மந்திரி ராதாமோகன்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய விவசாயத்துறை மந்திரி ராதாமோகன்சிங் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விவசாய பொருட்கள் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. விளைநிலம் பரப்புகளும் அதிகரித்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாததால் உணவு தானியம் உற்பத்தி குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஆண்டு 25 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி ஆயின. 16 கோடி டன் பால் பொருட்கள் உற்பத்தி ஆகின.

தற்போது விளைச்சல் அதிகரித்து இருப்பதால் 27 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல கடந்த ஆண்டு காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி 28 கோடி டன்னாக இருந்தது. அதுவும் கணிசமாக அதிகரிக்கும்.

பருப்பு பயிர்கள் கடந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 70 லட்சம் டன் பருப்பு உற்பத்தி ஆனது. ஆனால் இந்த ஆண்டு 2 கோடியே 10 லட்சம் டன் பருப்பு உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

மொத்தத்தில் கடந்த ஆண்டு 10 கோடியே 23 லட்சம் ஹெக்டேரில் அரிசி, பருப்பு, மக்கா சோளம் போன்றவைகள் பயிரிடப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 10 கோடியே 60 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிரிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News