செய்திகள்
கோப்பு படம்

சத்தீஸ்கர்: 2 தளபதிகள் உள்பட 3 நக்சலைட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்

Published On 2016-09-26 08:10 GMT   |   Update On 2016-09-26 08:10 GMT
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இரு தளபதிகள் உள்பட 3 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
ராய்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் முகாமின்மீது தாக்குதல் நடத்த நக்சலைட்கள் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்ஸ்பால் மற்றும் டோய்னார் வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு சிறப்புப்படை போலீசார் நேற்றிரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினர் வந்திருப்பதை அறிந்துகொண்ட நக்சலைட்கள் சுமார் 20 பேர், அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். நக்சல் ஒழிப்பு சிறப்புப்படை போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் திருப்பதி (எ) ஆகாஷ், ரமேஷ் (எ) லோகேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான இவர்கள் இருவரும் அம்மாநில மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆறாவது படைப்பிரிவின் தளபதிகளாக செயல்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இதேபோல், கொன்டகான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நபர் யார்? என்பது அடையாளம் தெரியவில்லை எனவும் பஸ்ட்டார் சரக போலீஸ் ஐ.ஜி. கல்லுரி தெரிவித்துள்ளார்.

Similar News