செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Published On 2016-09-24 09:34 GMT   |   Update On 2016-09-24 09:34 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வசீம் அஹமத் லோனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பலர் பாதுகாப்பு படையினரின் அத்துமீறலை எதிர்த்தும், காஷ்மீருக்கு சுதந்திரம் தேவை என்றும் முழக்கங்களை எழுப்பியபடி, பேரணியாக சென்றனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தீவிரவாதி புர்கான் வானி என்பவர் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு சுமார் நூறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 78 நாட்களாக காஷ்மீர் மாநிலம் கலவரக் காடாக காணப்படும் நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நாதியால் ரபியாபாத் அருகிலுள்ள பன்போரா கிராமத்தை சேர்ந்த வசீம் அஹமத் லோன் என்பவர் நேற்று பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரை அங்குவந்த ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றதாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வசீம் அஹமத் லோன் மரணத்தை தொடர்ந்து பாரமுல்லா மாவட்டத்தின் பல பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரபியாபாத் நகரம் மற்றூம் பன்போரா கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் வசீம் அஹமத் லோன் உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. தடை உத்தரவையும்மீறி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பிய அவர்களில் பலர் பாதுகாப்பு படையினரின் அத்துமீறலை எதிர்த்தும், காஷ்மீருக்கு சுதந்திரம் தேவை என்றும் முழக்கங்களை எழுப்பியபடி, பேரணியாக சென்றனர்.

Similar News