செய்திகள்

டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: வக்கீல்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

Published On 2016-08-10 09:40 GMT   |   Update On 2016-08-10 09:41 GMT
டெல்லியில் வக்கீல்கள் சட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. அப்போது வக்கீல்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம், முற்றுகை, போராட்டம் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள் மீது ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்ட திருத்தங்களை வாபஸ் பெறக் கோரியும் வக்கீல்கள் தினமும் போராட்டம் நடத்தி வந்தனர். கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் சென்னை ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று டெல்லியில் வக்கீல்கள் சட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி வக்கீல்கள் தினமும் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலை ராஜன் தெரிவித்தார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-ந்தேதி மீண்டும் நடைபெறுகிறது. அதே சமயம் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News