உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் உடுமலை விவசாயிகள் ஆர்வம்

Published On 2023-06-21 10:53 GMT   |   Update On 2023-06-21 10:53 GMT
  • தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இச்சாகுபடியை முழுவதுமாக விவசாயிகள் கைவிட்டனர்.
  • தேனீக்கள் வாயிலாக நடைபெறும் இந்த சேர்க்கையால் மணிகள் நல்ல எடையுடனும், பிழிதிறனும் கூடுதலாக இருக்கும்

குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு ஒரு சீசனில் மட்டும் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.குறிப்பாக பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு எண்ணெய் உற்பத்திக்காக விற்பனை செய்தனர். கணபதிபாளையம், ராகல்பாவி, வடுகபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இரு பட்டங்களில் கிணற்று பாசனத்துக்கும் இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் போதிய விலை கிடைக்காதது, மகசூல் குறைவு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இச்சாகுபடியை முழுவதுமாக விவசாயிகள் கைவிட்டனர். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஆலாம்பாளையம் சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சூரியகாந்தி விதைகளை பழனி பகுதியிலிருந்து வாங்கி வந்து நடவு செய்துள்ளோம். அறுவடைக்கு முன் கிளி உள்ளிட்ட பறவைகளில் இருந்து கதிர், மணிகளை பாதுகாக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.மேலும் அறுவடைக்கான எந்திரங்களும் கிடைப்பதில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக அரசு நேரடி கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை மீட்க சிறப்பு மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

சூரியகாந்தி பூக்களில் மணிகள் பிடிக்க அயல் மகரந்த சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.தேனீக்கள் வாயிலாக நடைபெறும் இந்த சேர்க்கையால் மணிகள் நல்ல எடையுடனும், பிழிதிறனும் கூடுதலாக இருக்கும். விளைநிலங்களில் களைக்கொல்லி மருந்துகள் அதிக அளவு தெளிப்பதால் தேனீக்கள் பரவலாக குறைந்து விட்டது.இதனால் அயல் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பும் ஏற்பட்டதும், இச்சாகுபடியை கைவிட முக்கிய காரணமாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News