உள்ளூர் செய்திகள்

 அதிவேகமாக வந்த அரசு பஸ் மோதிய காட்சி

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த அரசு பஸ் மோதி ஒருவர் பலி

Published On 2023-06-18 10:10 GMT   |   Update On 2023-06-18 10:10 GMT
  • அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது

திருப்பூர் : 

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது. அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி., காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் நடந்து செல்வதற்காக நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பயணிகள் நடைமேடையை பயன்படுத்தாமல் பஸ் நிலைய வளாகப்பகுதியிலேயே நடந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையம் மற்றும் சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களை வாகன நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மட்டுமின்றி பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக வருவதால் நடந்து செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் பஸ்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் நிலைய முன்பகுதி, மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News