உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை தமிழக அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும் விரைந்து வழங்கிட வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2023-01-31 09:00 GMT   |   Update On 2023-01-31 11:15 GMT
  • ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு சில காலங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.
  • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்கிட தமிழக அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு சில காலங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையதல்ல.

இது குறித்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த வழக்கில் அக விலைப்படி உயர்வு அளித்திட காலக்கெடுவுடன் கூடிய தீர்ப்பு நீதிமன்றம் அளித்துள்ளதின் பேரில் தமிழக அரசும் நிர்வாகமும், இடைக்கால தடை பெற்றுள்ளது. இது ஓய்வூதியர்களின் நலனுக்கு எதிரான மற்றும் தொழிலாளர் விரோத போக்கான செயலாகும்.

மேலும் கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் விருப்ப ஓய்வு, வயது முதிர்வு ஓய்வு மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் நாளில் வழங்கப்பட வேண்டிய பொது சேமநல தொகை, கருணைத் தொகை, விடுப்பு ஈடு செய்தொகை ஆகிய பணப் பலன்கள் ஏதும் வழங்காமல், வெறுங்கையுடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்பியுள்ளதும் அவர்தம் குடும்ப நலன் சார்ந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றிட இயலாத நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதும் அநீதியே ஆகும். எனவே மேற்படி அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்கிட தமிழக அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News