உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை

Published On 2022-12-20 07:00 GMT   |   Update On 2022-12-20 07:00 GMT
  • ஜெகதாம்பாள் நகரில் தேவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி துடித்தனர்.
  • போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவா ( என்கிற) தேவராஜ் (வயது 34). எலக்ட்ரீசியன்.

இவருக்கு திருமணம் ஆகி, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன.

தேவா, கோழிக்கால்நத்தம் மற்றும் திருச்செங்கோடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், மண்டபங்கள், புதிய கட்டிடங்களில் வயரிங் உள்ளிட்ட எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மேலும் வெளியூர்களுக்கும் சென்றும் வேலை செய்து வந்தார்.

நேற்று தேவாவின் செல்போனுக்கு எலக்ட்ரிக்கல் வேலை இருக்கிறது. உடனே புறப்பட்டு வருமாறு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாசபாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகில் நள்ளிரவில் வேலை முடிந்து தேவா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவா உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடினார். இருப்பினும் மர்ம நபர்கள் விரட்டிச் சென்று சுற்றி வளைத்து கத்தியால் குத்தினர். அவரது உடலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். பலமுறை கத்தியால் குத்தியபோதும் அவருடைய உயிர் போகவில்லை. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து மர்ம நபர்கள், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து, துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்தனர். இதனால் தேவா உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.அவரது இறந்து விட்டதை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதனிடையே வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தேவாவை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது ஜெகதாம்பாள் நகரில் தேவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி துடித்தனர்.

இது பற்றி திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவா உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம்? குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Similar News