உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை பல லட்சத்துக்கு விற்ற பெண்

Published On 2022-06-17 07:15 GMT   |   Update On 2022-06-17 07:15 GMT
  • மதுரையை சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக பெண் தெரிவித்துள்ளார்.
  • இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

மதுரை:

மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கணவரை இழந்த அந்த பெண் தனது மகன், மகள்களை வேலைக்கு சென்று வளர்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

இந்த விஷயம் மகன், மகள்களுக்கு தெரியவந்தால் அவமானமாகி விடும் என கருதிய அந்த பெண் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி சமாளித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த அந்த பெண் பின்னர் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை இல்லை.

இதுகுறித்து கேட்டபோது உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து தடுப்பூசி போட சுகாதார நிலையத்திற்கு குழந்தையுடன் கட்டாயம் வர வேண்டுமென செவிலியர்கள் அந்த பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றனர். அதன்படி சுகாதார நிலையத்திற்கு அந்த பெண் மட்டும் சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் குழந்தை மாயமானது குறித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மதுரையை சேர்ந்த தம்பதிக்கு அந்த குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

இந்து பெண்ணிற்கு பிறந்த குழந்தையை வேறு மதத்தினருக்கு தத்துக்கொடுக்கும் போது அதற்கான பிரத்யேக சட்டமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி பெண் குழந்தை பல லட்சத்துக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தத்தெடுத்த முஸ்லிம் தம்பதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை உறவினர்களை அழைத்து விமரிசையாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News