உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே தனியார் பனியன் கம்பெனி பஸ் கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் படுகாயம்

Published On 2023-04-03 05:38 GMT   |   Update On 2023-04-03 05:38 GMT
  • பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.
  • பஸ்சில் பயணம் செய்த 10-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் என்ற பகுதியில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்கு நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பேர் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதற்காக பனியன் கம்பெனியின் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல் தனியார் பனியன் கம்பெனி பஸ் நம்பியூர் பகுதிகளில் ஆண், பெண் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. காலை 8 மணியளவில் அந்த பஸ் நம்பியூர் அருகே உள்ள சுட்டிக்கல் மேடு நால்ரோடு என்ற பகுதியில் சென்றது. அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை அபாய கட்டத்தில் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News