உள்ளூர் செய்திகள்

பெண் போலீசிடம் அநாகரிகமாக நடந்த வழக்கில் வாலிபருக்கு நிபந்தனை ஜாமின்- மதுரை ஐகோர்ட்

Published On 2024-03-01 10:53 GMT   |   Update On 2024-03-01 10:53 GMT
  • சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
  • எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

மதுரை:

கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்ததும், பெண் போலீஸ், கோவிலில் மது அருந்தக்கூடாது என்று கூறி, அவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் மதுபோதையில் இருந்த சிலர், போலீசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் பேரில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் குபேந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பெண் போலீசை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரர் நீண்டநாளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.

அவர், நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி பிறப்பித்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News