உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கோழிக்கறி விலை கிலோ ரூ.180 ஆக வீழ்ச்சி: சபரிமலை பக்தர்கள் விரதத்தால் விற்பனை சரிந்தது

Published On 2023-11-25 05:43 GMT   |   Update On 2023-11-25 05:43 GMT
  • கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கும்.
  • கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக சூடுபிடிக்கும் என்று கோழி இறைச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

சென்னையில் கோழிக்கறி விலை தீபாவளி வரை உச்சத்திற்கு சென்றது. கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்பட்டது. மட்டன் கிலோ ரூ.1000 வரை உயர்ந்தது.

ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து இறைச்சி விலை குறையத் தொடங்கின. இந்த மாதத்தில் சிலர் விரதம் இருப்பது வழக்கம். மேலும் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வதால் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

இதனால் மீன், மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்பனை குறைந்தது. இதனால் கடந்த 2 வாரமாக இறைச்சி கடைகள் வெறிச்சோடியது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு கறிக்கோழி, ஆடுகள் போன்றவை கூடுதலாக கொண்டு வருவது வழக்கம். ஆனால் கார்த்திகை மாதத்தில் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர்.

அசைவ உணவு சாப்பிடக் கூடியவர்கள் கோழிக்கறியை வாங்காததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கோழிக்கறி கிலோ ரூ.180ஆக குறைந்தது. கிலோவிற்கு ரூ.60 முதல் 80 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் மாதம் இறுதி வரை விலை குறைவாகத்தான் இருக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கும். அதே நேரத்தில் தற்போது உணவு ரூ.180-ஐ விட மேலும் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. எப்போதும் கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக சூடுபிடிக்கும் என்று கோழி இறைச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News