உள்ளூர் செய்திகள்

பாலியல் பலாத்கார முயற்சி- சிறுமியை தீ வைத்து எரித்து கொன்ற வாலிபர் கைது

Published On 2022-08-22 11:22 GMT   |   Update On 2022-08-22 11:22 GMT
  • அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார்.
  • பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து சிறுமியின் ஆடையில் பற்ற வைத்தார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து அவரது ஆடையில் பற்ற வைத்தார்.

இதில் சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து சின்னமனூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமியின் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் தேனி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மையம் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News