உள்ளூர் செய்திகள்

2 குட்டிகளுடன் முகாமிட்ட 6 காட்டு யானைகள்

மருதமலை அடிவாரத்தில் 2 குட்டிகளுடன் முகாமிட்ட 6 காட்டு யானைகள்

Published On 2022-06-05 08:07 GMT   |   Update On 2022-06-05 09:50 GMT
  • மாதம்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை வனச்சரகர்கள் தலைமையில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
  • நேற்று காலை தொண்டாமுத்தூர் குபேரபுரி வழியாக சுள்ளிப்பள்ளத்தை கடந்து மாதம்பட்டி நொய்யல் ஆற்றில் யானைகள் பதுங்கியது.

வடவள்ளி:

கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

மருதமலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக 2 குட்டிகளுடன் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. 2 நாட்களுக்கு முன்பு ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மயில்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் பலாப்பழம், மாம்பழங்களை தின்று தீர்த்தது.

நேற்று காலை தொண்டாமுத்தூர் குபேரபுரி வழியாக சுள்ளிப்பள்ளத்தை கடந்து மாதம்பட்டி நொய்யல் ஆற்றில் யானைகள் பதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாதம்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை வனச்சரகர்கள் தலைமையில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், டார்ச் அடித்தும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 21 பேர் கொண்ட வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து இந்த பணியை மேற்கொண்டனர்.

இதற்கு பலனாக மாலை 3 மணி அளவில் அந்த இடத்தை விட்டு யானைகள் மதுக்கரை வனப்பகுதி நோக்கி நகர்ந்தன. தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மலைக்கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News