2 நாய்களை கொன்று சந்தன மரம் வெட்டி கடத்தல்
- மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
- பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை பூசாரிபாளையம் ரங்கசாமி நகரில் மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் துரை (வயது 45) என்பவர் தனது மனைவியுடன் தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார்.
மேலும் தோட்டத்தில் 3 நாட்டு நாய்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தோட்டத்தில் இருந்த 3 நாய்களில் 2 நாய்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தது.
இதனைப்பார்த்த துரை தோட்டத்து உரிமையாளரின் மில்லில் வேலை செய்து வரும் செந்தில் குமார் (43) என்பவரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும் என சந்தேகப்பட்ட செந்தில்குமார் தோட்டத்தை சுற்றி பார்த்தார். அப்போது அங்கு வளர்க்கப்பட்ட 5 அடி உயரமுள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் நாய் குரைத்தால் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நாய்களை கொலை செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி இருக்கலாம் என தெரியவந்தது.
இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தி வந்தனர். அவர்கள் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தற்போது 2 நாய்களை கொன்று சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.