உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஜல்லிக்கற்கள், மணல் கனிமவளம் பாதிக்கும் அபாயம்

Published On 2023-01-08 06:31 GMT   |   Update On 2023-01-08 06:31 GMT
  • சுற்றுச்சூழல் அனுமதியை காரணம் காட்டி கேரளாவில் 900-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
  • வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மணல், ஜல்லிகற்கள் எடுத்து செல்வதால் கனிமவளங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலூர்:

அண்டை மாநிலமான கேரளாவில் சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழக பகுதியில் இருந்து ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவை அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதியை காரணம் காட்டி கேரளாவில் 900-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

மேலும் அந்த குவாரிகள் செயல்பட தற்காலிகமாக அதிகாரிகள் தடைவிதித்தனர். இதனால் தமிழக பகுதியில் இருந்து அதிகளவில் மணல், ஜல்லிகற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இன்டர்ஸ்டேட் பாஸ் மட்டும் கையில் வைத்துக்கொண்டு கேரளாவுக்கு அதிகளவில் கனிமவளங்களை அள்ளிச்செல்கின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவுக்கு தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக லாரிகளில் ஜல்லிகற்கள் மற்றும் மணல் கொண்டு செல்லப்படுகிறது. எல்லையோர மாவ ட்டங்களில் உள்ள குவாரிகளில் ஒப்பந்தம் செய்து எடுத்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்களில் வெடி, பாறை அடுக்குகளை சிதைத்து நீர்வழித்தடங்களை அழிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மணல், ஜல்லிகற்கள் எடுத்து செல்வதால் கனிமவளங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து தங்கள் மேல்அதிகாரிகளுக்கு தெரிவித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் மணல், ஜல்லிகற்கள் அதிகளவு கொண்டுசெல்வதை தடுக்கவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News