உள்ளூர் செய்திகள்

சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்த போது எடுத்தபடம். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்-தீர்த்தவாரியும் நடைபெற்றது

Published On 2022-07-28 09:14 GMT   |   Update On 2022-07-28 09:14 GMT
  • ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
  • ஏராளமானோர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்:

ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபட்டால் அவர்களுடைய ஆசி கிடைக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தர்ப்பணம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடற்கரையில் எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

தீர்த்தவாரி

அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவருக்கு சண்முக விலாஸ் மண்டபத்தில் வைத்து பால்,மஞ்சள், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் நடந்தது. இதனையடுத்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. 8.30 மணிக்கு சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து சுவாமி அஸ்திரதேவருக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலுக்கு சென்றார்.

Tags:    

Similar News