உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மதுரை-நத்தம் 4 வழிச்சாலையில் வன விலங்குகளுக்காக ரூ.3 கோடியில் சுரங்கப்பாதை

Published On 2022-06-25 04:45 GMT   |   Update On 2022-06-25 04:45 GMT
  • 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் அழகர்மலை - உசிலம்பட்டி வனப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த சுரங்கப்பாதை விலங்குகள் செல்லவும், அங்குள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்:

மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் இருந்து நத்தம் வரையிலான சாலை அழகர்கோவில் வனச்சரகத்துக்கு சொந்தமான 600 மீட்டர் பகுதியை கடந்து செல்கிறது. அழகர்கோவில் வனப்பகுதியில் காட்டு மாடு, மான், முயல், பாம்பு, நரி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளின் வழித்தடம் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் அழகர்மலை - உசிலம்பட்டி வனப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து வன விலங்குகளின் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அழகர்மலை மற்றும் உசிலம்பட்டிக்கு இடையிலான 250 மீட்டர் நீல சாலை மேம்பாலமாக மாற்றப்படுகிறது. விலங்குகள் அந்த சாலையை எளிதாக கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3 கோடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வன விலங்குகளுக்கு தண்ணீர் ஊற்றுகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல நத்தம் முதல் துவரங்குறிச்சி வரையிலான 4 வழிச்சாலையில் வனத்துறைக்கு சொந்தமான 628 மீட்டர் நீள இடம் கையகப்படுத்த–ப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வன விலங்குகள் சாலையை எளிதாக கடந்து செல்லும் வகையில் 150 மீட்டர் இடைவெளியில் 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த சுரங்கப்பாதை விலங்குகள் செல்லவும், அங்குள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அரசு இதற்கு அனுமதி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகளுக்காக தமிழகத்திலேயே நத்தம் பகுதியில்தான் 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News