உள்ளூர் செய்திகள்

வணிகர்கள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினராக வேண்டும்- தருமபுரி வர்த்தகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-08-18 10:25 GMT   |   Update On 2022-08-18 10:25 GMT
  • ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு விட்டனர்.
  • இனிவரும் காலங்களில் நாம் நமது வணிக முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி நகர வர்த்தகர்கள் சங்க 50-வது ஆண்டு பொன்விழா ஆலோசனைக் கூட்டம் தருமபுரி வர்த்தகர் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் எம்.கே.எஸ். உத்தண்டி தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் பொருளாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சேலம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன் கலந்துகொண்டு பேசுகையில்:-

வணிகர்கள் வாழ்ந்தால் தான் ஒரு நாடு வளரும், தற்போது வணிகர்களின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு விட்டனர்.

இதே நிலை நீடித்தால் இன்னும் 2 ஆண்டுகளில் சிறு வணிகமே இல்லாத நிலை ஏற்பட்டு விடும். இதனை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியால் நாம் சொல்லில் அடங்கா துயருக்கு ஆளாகி உள்ளோம். வணிகர்கள் சம்பளம் இல்லாத அரசு ஊழியராய் செயல்பட்டு, பொதுமக்களிடம் வரியை வாங்கி அரசுக்கு செலுத்தி வருகிறோம். ஆனால் நமக்கு பாதுகாப்பில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தேவையற்றது. இதனால் நடுத்தர ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து விற்கும்போது அதனை நாம் எதிர்த்து போராட வேண்டும். அவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கும் நிறுவனங்கள் நமக்கு ஏன் தரக்கூடாது.

இனிவரும் காலங்களில் நாம் நமது வணிக முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது வாடிக்கையாளர்களை நேரில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் சிறு வணிகம் பாதிக்கப்படாமல் இருக்கும். பல்வேறு சலுகைகளைப் பெற வணிகர்கள் அனைவரும் கட்டாயம் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் அப்போதுதான் நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார்.

இக் கூட்டத்தில் மாவட்ட அனைத்து வணிக சங்க செயலாளர் கிரிதரன், பொருளாளர் ஆண்டாள் ரவி, எலக்ட்ரிக்கல் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் வர்த்தக சங்க துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News