உள்ளூர் செய்திகள்
தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-05-23 09:30 GMT   |   Update On 2022-05-23 09:30 GMT
நேற்று ஒரே நாளில் தாவரவியல் பூங்காவில், 27,259 பேர் கண்காட்சியை பார்க்க திரண்டனர்.
ஊட்டி:
 
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி 20-ந் தேதி தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
 
மலா்க்காட்சி முதல் நாளில் 12,774 பேரும், 2-வது நாளில் 19,513 பேரும் வந்திருந்த நிலையில், 3-வது நாளான  நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் தாவரவியல் பூங்காவில், 27,259 பேர் கண்காட்சியை பார்க்க திரண்டனர்.

சுற்றுலா பயணிகள் மலா் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் இருந்த மலா்களைப் பாா்த்து ரசித்ததோடு, புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். 
 
மேலும் கண்காட்சியையொட்டி பூங்காவில் பல்வேறு இசைப்பாடல்களும் இசைக்கப்பட்டது. இசைக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து சுற்றுலா பயணிகளும் நடமானடி மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அங்கு  கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

நேற்று காலை முதலே ஊட்டியில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடி பூங்காவை வலம்வந்து, மலர் அலங்காரங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் பூங்காவில் உள்ள புல்வெளி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் குழந்தைகள், வயதானவா்கள், பெண்கள் கடும் அவதிப்பட்டனா்.
 
இதற்கிடையே கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த கோவை வேளாண் பல்கலைக்கழக முகப்புத் தோற்றம் காற்று காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.  இந்த சம்பவம் காரணமாக திடீா் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து பூங்கா ஊழியா்கள் மீண்டும் அதை சரி செய்து மலா் அலங்காரம் செய்தனா். இன்றும் சுற்றுலா பயணிகள் வருகை  அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

Similar News