உள்ளூர் செய்திகள்
பயிற்சியை மாவட்ட கலெக்டர் விசாகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் காந்திராஜன் எம்.எல்.ஏ மற்றும் பல

திண்டுக்கல்லில் பனை வெல்லம் தயாரிப்பு பயிற்சி

Published On 2022-05-19 08:49 GMT   |   Update On 2022-05-19 08:49 GMT
திண்டுக்கல்லில் பனை வெல்லம் தயாரிப்பு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள கோவிலூர் ஊராட்சி கருத்தக்காபட்டியில் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நவீன முறையில் பனைெவல்லம் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

காந்திராஜன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்க வழக்கங்களில் உடலுக்கும் சத்தும், சுகாதாரமும், ஆரோக்கியமும் இருந்தது. இன்றைய நவீன காலத்தில் பழங்கால அந்த உணவுப் பழக்க வழக்கங்களில் இருந்து மாறிய நாம் தற்போது மீண்டும் முன்னோர்களின் உணவுப்பழக்க வழக்கங்களுக்கு மாறி வருகிறோம். பனை வெல்லம் போன்ற உணவுப்பொருட்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. அதேபோல் இயற்கை விவசாய விளைபொருட்களை பலர் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இது இன்றை காலத்திற்கு அவசியமானது.
 
வேளாண்மையில் மிகவும் முக்கியமானது விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதுதான். அந்த வகையில் பல்வேறு வகையான விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பனை பொருட்களும் ஒன்று.

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மதுரை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனம், மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனம். இதில் 26 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13 பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் 3,644 தனி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

2021-2022-ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறையின் ஒரு கூறாக ‘பனை மேம்பாட்டு இயக்கம்’ என்ற அறிவிப்பில், பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளித்திடவும், இலவச உபகரணங்கள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 12 வகையான பனை தொழிலுக்குத் தேவையான இலவச உபகரணங்கள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நவீன தொழில்நுட்ப முறையில் கருப்பட்டி தயாரிக்க பயிற்சி 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து 26-ந்தேதி முதல் 3 நாட்கள் பட்டறிவு பயணமும், இவர்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு, பேக்கரி தயாரிப்பில் பனஞ்சர்க்கரை பயன்படுத்துதல், பதநீர் பதப்படுத்துதல் தொழில் நுட்பம், நுங்கு தொழில் நுட்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியை பனை வெல்ல சங்க உறுப்பினர்கள் சிறப்பாக பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News