உள்ளூர் செய்திகள்
காந்தி மார்க்கெட்டில் எலுமிச்சை வரத்து குறைந்துள்ள காட்சி.

வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு

Update: 2022-04-17 09:08 GMT
திருச்சி மாவட்டத்தில் வரத்து குறைவால் எலுமிச்சம் பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருச்சி:

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இயற்கை மற்றும் குளிர்ச்சி மிகுந்த பானங்களை பருகி வருகிறார்கள். இதனால் பழங்கள், குளிர்பானங்களில் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டபோதிலும் எங்கும் சரியாக செயல்படவில்லை. ஆனால் திரும்பிய திசையெல்லாம் சாலையோர குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. இளநீர், நுங்கு பதனீர், தர்பூசணி, பழச்சாறு, கரும்புச்சாறு வண்டிகள் மக்களின் தாகத்தை தணித்து வருகிறது.

வழக்கமாக தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் எப்போதுமே சற்று அதிகமாகத்தான் இருக்கும். இந்த ஆண்டும் அதே போல் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

கடந்த வாரம் திடீரென்று சில நாட்கள் பெய்த கோடை மழை வெப்பத்தின் தாக்கத்தை சற்றே குறைத்தது. ஆனால் அதையடுத்த நாட்கள் மீண்டும் வெயில் கோர தாண்டவம் ஆடுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருச்சி மாநகர் பகுதிகளில் ஜூஸ் கடைகளில் கடந்த வாரத்தில் ரூ.15&க்கு விற்பனை செய்த எலுமிச்சை பழ ஜூஸ் இந்த வாரம் ரூ.20&ஐ எட்டியுள்ளது.

சிட்ரஸ் சத்து மிகுந்த உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் அளிக்கும் எலுமிச்சம் பழம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க நிர்வாகி அப்துல் ஹக்கீம் கூறியதாவது:

காந்தி மார்க்கெட் பகுதியில் சுமார் 200&க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது கோடை காலம் ஆரம்பித்து இருப்பதால் பழ வகைகளின் விலை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக எலுமிச்சை பழம் கடந்த வாரத்தில் கிலோ ரூ.250&க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம் தொடர்ந்து எலுமிச்சை பழங்களின் வரத்து திருச்சி மாவட்டத்திற்கு குறைந்துள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருவதால் பழம் மற்றும் ஜூஸ் வகைகளை அதிகம் நாடுகிறார்கள். இதில் முக்கியத்தும் பெற்றதாக எலுமிச்சம் பழம் இருப்பதால் விலை உயர்ந்துள்ளதோடு, மவுசும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தான் அதிகமாக எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. மேலும் தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதால் இந்தப் பழங்களை வெளியூர்களிலிருந்து ஏற்றிவரும் வண்டிகளுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. அதனாலும் பழ வகைகளின் விலை ஏறியுள்ளது.
-
ஜூஸ் கடைக்காரர்களும் அதிகமாக வாங்கி செல்வதால் உடனடியாக எலுமிச்சை பழம் மார்க்கெட் பகுதியில் உடனடியாக விற்பனை ஆகிவிடுகிறது. பொதுமக்களும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள். வரத்து குறைவால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்றார்.


Tags:    

Similar News