உள்ளூர் செய்திகள்
கைது

சோழசிராமணி பகுதியில் அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர் கைது

Update: 2022-04-17 05:20 GMT
சோழசிராமணி பகுதியில் அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது70).

இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பழனிசாமியின் மனைவி தனலட்சுமி (65) மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் புகையிலை தடுப்பு அதிகாரி என்றும் உங்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும், உங்கள் கடை மற்றும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு தனலட்சுமி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை நாங்கள் விற்பனை செய்வதில்லை, வேண்டுமானால் சோதனை செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அப்போது அந்த நபர் மளிகை கடை மற்றும் வீடுகளுக்குள் சென்று சோதனை நடத்தவது போல் வீட்டுக்குள் இருந்த பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு தனலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததை பார்த்துள்ளார். அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று மாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் சோழசிராமணி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பள்ளிப்பாளையம், சின்னவீதி‌ பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும், குட்கா புகையிலை அதிகாரி எனக்கூறி தனலட்சுமியின் வீட்டில் 7 பவுன் தங்க நகைளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 7 பவுன் தங்க நகையை மீட்டனர். பின்பு அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News