உள்ளூர் செய்திகள்
சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறை- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-04-13 10:26 GMT   |   Update On 2022-04-13 10:30 GMT
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் பயணம் செய்வதை பொதுமக்கள் பலர் தவிர்த்து வருகின்றனர்.
போரூர்:

தமிழ் வருட பிறப்பையொட்டி நாளையும் (14-ந் தேதி), புனித வெள்ளியையொட்டி நாளை மறுநாளும் (15-ந்தேதி) என 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாகும். இதைத்தொடர்ந்து 16-ந் தேதி (சனிக்கிழமையும்) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகையான வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை நாளாகும்.

இதையடுத்து நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தமிழ் புத்தாண்டு, மற்றும் ஈஸ்டர் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக தினசரி வழக்கமாக இயக்கப்படும் 2,100 அரசு பஸ்களுடன் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சேர்த்து கூடுதலாக 1200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல் நாளான இன்று கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக வருகிற 17-ந்தேதி பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்புபஸ்கள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோயம்பேட்டில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சை, வேளாங்கண்ணி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி திருச்சி, பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பஸ்கள் புறப்பட்டு சென்றது.

ஆனால் காலையில் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லை. மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் தான் பஸ்சில் பயணம் செய்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் பயணம் செய்வதை பொதுமக்கள் பலர் தவிர்த்து வருகின்றனர். எனவே இன்று மாலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும் நாளையும் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப 500 சிறப்பு பஸ்கள் வரை இயக்க திட்டமிட்டு உள்ளோம். பஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல் வருகிற 16-ந் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 2806 சிறப்பு பஸ்கள் மற்றும் 201 தனியார் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிகபட்சமாக 932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News