உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

டாக்டர் சுப்பையா பணி இடைநீக்கம் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-03-31 06:41 GMT   |   Update On 2022-03-31 06:41 GMT
டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அந்த மாணவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.

டாக்டர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மார்ச் 24-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்பையா தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ண குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று காலையில் பிறப்பித்தார்.

அதில், சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்தார். அவருக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

Tags:    

Similar News