உள்ளூர் செய்திகள்
உயர்நீதிமன்றம், நளினி முருகன்

ஜாமீன் கேட்டு நளினி மனு- உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-03-22 20:45 GMT   |   Update On 2022-03-22 20:45 GMT
மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இல்லாமல் எந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் கேட்க முடியும்? என்று நளினி தரப்பு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் அந்த தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்,சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். 

அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதில் நளினி கோரியிருந்தார்.

இதுகுறித்து முடிவு எடுக்கும் வரை தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது குறித்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். 

நளினி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கலாம் அல்லது ஜாமீன் கேட்கலாம். தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதை நிறுத்தி வைக்க கேட்கலாம். 

ஆனால், எந்த ஒரு மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாமல், நேரடியாக எந்த சட்டத்தின் அடிப்படையில் நளினிக்கு ஜாமீன் கேட்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க இயலாது. மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். 

பின்னர் நளினி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணையை நாளைக்கு(வியாழக்கிழமை) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News