உள்ளூர் செய்திகள்
விபத்து

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவர் பலி

Published On 2022-03-18 10:56 GMT   |   Update On 2022-03-18 10:56 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இந்தக் கோவில் திருவிழாவை காண தைலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் பகுதியை அடுத்து உள்ள கேணிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரத் (வயது 19). திண்டிவனம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர் விஜயபிரபாகரன் (21),கார்த்திக் (18) . இவர்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று மாலை இவர்கள் 3பேரும் கேணிபட்டியிலிருந்து தைலாபுரத்தில் நடந்த அம்மன் கோவில் திருவிழாவை காண மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் திருவிழா முடிந்து நள்ளிரவில் தைலாபுரத்தில் இருந்து கேணிபட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிள் தைலாபுரம் மெயின் ரோட்டில் வரும்போது மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டியதில் நிலைதடுமாறி முன்னால் லோடு ஏற்றி சென்ற டிராக்டரின் பின்புறம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் கிடந்த விஜயபிரபாகரன், கார்த்திக் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News