உள்ளூர் செய்திகள்
பாளை மார்க்கெட் பகுதியில் பேனர் அகற்றப்பட்ட காட்சி.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் நெல்லையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றம்

Published On 2022-01-27 09:54 GMT   |   Update On 2022-01-27 09:57 GMT
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லையில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது.
நெல்லை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் நெல்லையில் உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க களம் இறங்கி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர் அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். பல இடங்களில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டு இருந்தன.

இதுபோன்ற சுவரொட்டிகளை அகற்றும் பணியிலும், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், டவுன், பேட்டை, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், என்.ஜி.ஓ. காலனி, சமாதானபுரம் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி இன்று தொடங்கியது.

இதேபோல் களக்காடு, ராதாபுரம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திசையன்விளை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகளும், போலீசாரும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோன்று தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலை ஓரமாக உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை சாக்கு மூட்டை அல்லது துணியால் மூடி மறைக்கும் பணியிலும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
Tags:    

Similar News