உள்ளூர் செய்திகள்
நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

குமரி மாவட்ட கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2022-01-19 10:13 GMT   |   Update On 2022-01-19 10:13 GMT
5 நாட்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகர்கோவில்:

கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தொடர்ந்து 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்தது. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது. காலையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். பக்தர்கள் நாகராஜரை தரிசனம் செய்து சென்றனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடந்தது.

5 நாள்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர். பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கடந்த 5 நாட்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, குளச்சல், சொத்தவிளை பீச், மாத்தூர் தொட்டில்பாலம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தார்கள். திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

5 நாட்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 5 நாட்களும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News