உள்ளூர் செய்திகள்
முதியவருக்கு அவசரகால மருத்துவ நிபுணர் முதலுதவி அளித்தபோது எடுத்தபடம்.

காயத்தால் அவதிப்பட்ட முதியவருக்கு முதலுதவி சிகிச்சை

Published On 2022-01-16 07:16 GMT   |   Update On 2022-01-16 07:16 GMT
திருச்சி அருகே அழுகிய புண்களுடன் அவதிப்பட்ட ஆதரவற்ற முதியவருக்கு அவசர கால மருத்துவ நிபுணர் முதலுதவி கிசிச்சை அளித்தார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் பாலத்திற்கு அடியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சாலையோரத்தில் இருந்து வந்தார்.

அவருக்கு சிலர் அவ்வபோது உணவு வாங்கி கொடுத்து வந்தனர். அவருக்கு இடது காலில் ஏற்கனவே காயம் ஏற்பட்டு அதில் கட்டு கட்டி இருந்துள்ளார்.

ஆனால் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் மிகவும் மோசமாக நிலையில் அழுகி அதில் அதிக அளவில் புழுக்கள் வைத்து மிகவும் வேதனையோடு அந்த முதியவர் படுத்திருந்தார்.

இதை அந்த வழியாக வந்த சமுத்திரம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் பார்த்து விட்டு உடனே அவருக்கு உதவிட முயன்றார். மேலும் அழுகிய புண்ணில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் யாரும் அருகில் கூட செல்லாமல் தயங்கி உள்ளனர்.

இருப்பினும் ஒருவர் மட்டுமே தொடர்ந்து உணவு வழங்கி வந்துள்ளார். அப்போது ராஜசேகரன் சம்மந்தப்பட்ட முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்திட முடிவு செய்தார். அதன்படி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வந்தது. அதில் இருந்த அவசர கால மருத்துவ நிபுணர் டெய்சி கிளாரா சம்மந்தப்பட்ட முதியவரை சென்று பார்த்த போது காலில் இருந்து புண் அழுகி கடும் துர்நாற்றம் வீசியதை அறிந்து உடனே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கட்டை அகற்றினார்.

அப்போது காலில் இருந்த புண்ணில் இருந்து புழுக்கள் கொட்டியது. உடனே அதே இடத்தில் முதியவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைக்கள் அளித்து அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதியவர் சிகிச்சை பெற்று திரும்பினார்.

முதியவரின் காலில் இருந்து புண்ணில் அதிக அளவில் புழுக்கள் இருந்ததோடு கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் எதை பற்றியும் யோசிக்காமல் அதே இடத்தில் முதியவருக்கு தேவையான முதலுதவி அளித்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்த அவசர கால மருத்துவ நிபுணரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதுமட்டுமின்றி உரிய நேரத்தில் முதியவருக்கு உதவிய தலைமை ஆசிரியர் ராஜசேகரின் செயல் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Tags:    

Similar News