உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கிய காட்சி.

பாரதியார் நூற்றாண்டு விழா கட்டுரைப்போட்டி- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

Published On 2021-12-14 06:50 GMT   |   Update On 2021-12-14 06:50 GMT
கட்டுரை ,கவிதை, ஓவியப்போட்டிகளில் பங்கேற்றால் தன்னம்பிக்கை வளரும்.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வார விழா மற்றும் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி நல்லாசிரியர் சின்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

உடுமலை காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவர் பேசுகையில், பள்ளி மாணவ-மாணவிகள் வாசிப்பின் அவசியத்தை அறிந்து கொள்ள நூலகத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும் இது போன்று நடத்தப்படும் கட்டுரை ,கவிதை, ஓவியப்போட்டிகளில் பங்கேற்றால் தன்னம்பிக்கை வளரும். எனவே மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

தொடர்ந்து உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி நல்லாசிரியர் விஜயலட்சுமி அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலாமணி ,எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை புவனா, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News