செய்திகள்
போலீஸ் கமிஷனருடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

துரிதமாக செயல்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

Published On 2021-11-11 12:13 GMT   |   Update On 2021-11-11 12:13 GMT
கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை, தோளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி வைத்து உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டரை சென்னை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கனமழையால் சென்னை பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டி.பி. சத்திரம் கல்லறை தோட்டம் அருகே பெரிய மரம் ஒன்று விழுந்து கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தன்னுடன் இருந்தவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கல்லறை தோட்டத்தில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை பார்த்த உடன் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அருகில் சென்று உயிருள்ளதா? எனப்பார்த்தார். உயிர் இருப்பதை அறிந்த அவர், மயக்கம் நிலையில் இருந்த அந்த நபருக்கு முதலுதவி அளித்தார்.  யோசிக்காமல் உடனடியாக அவரை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தார். பின்னர் ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் அந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். தற்போது அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி துரிதமாக செயல்பட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியது குறித்த வீடியோ வெளியானது.  இந்த வீடியோவை பார்த்து அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் ஆணையர், பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆணையர் சங்கர் ஜிவால் ‘‘துரிதமாக செயல்பட்டு சுயநினைவின்றி கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது அந்த நபர் உயிரி பிழைத்துள்ளார். ராஜேஸ்வரி சிறந்த அதிகாரி. எல்லா பாராட்டுகளுக்கும் உரித்தானவர்’’ என்றார்.
Tags:    

Similar News