செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்

Published On 2021-11-05 09:59 GMT   |   Update On 2021-11-05 13:19 GMT
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் 2013-ம் ஆண்டில் தனக்கும், ஜோசப் பேபி என்பவருக்கும் திருமணம் ஆனதாகவும், பிறகு 2016-ம் ஆண்டு முதல் ஜோசப் தன்னைவிட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோவை  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு பதில் மனு அளித்த ஜோசப் பேபி,  கலைச்செல்விக்கும் எனக்கும் திருமணமே நடக்கவில்லை. அதனால், கலைச்செல்வியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என பதில்  மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜோசப் மனுவை ஏற்றுக்கொண்டு, கலைச்செல்வியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

கோவை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் முடிவில், கலைச்செல்விக்கும் ஜோசப்புக்கும் இடையே பணபரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால், கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாக குறிப்பிட்ட நீதிபதிகள், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாடுவதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை’’ என்று தங்களின் தீர்ப்பில் தெளிவுப்படுத்தி குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News