செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - திருமூர்த்திமலை ஆறுகளில் காட்டாற்று வெள்ளம்

Published On 2021-10-22 07:51 GMT   |   Update On 2021-10-22 07:51 GMT
இந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை 7 முறை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர்  மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை 7 முறை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதனால் பாசன பகுதிகளுக்கு  அணையில் இருந்து போதுமான தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் குடிநீர் வசதிக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் கரூர் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமார் 47 ஆயிரம் ஏக்கர்களுக்கு கடந்த செப்டம்பர் 20 - ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன்படி கடந்த ஒரு மாத காலமாக ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக - கேரள எல்லையில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. 

இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 80 அடியாக உயர்ந்துள்ளது.வருகிற 26 - ந்தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 80 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக ஏற்கனவே பாசனப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்து உள்ளது. வருகிற 26 -ந் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது.  

ஆகையால் தற்போது அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றனர். தற்போது அணைக்கு 1,680 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அமராவதி ஆற்றின் மூலம் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே உடுமலை அருகே திருமூர்த்தி மலைப் பகுதியில் பெய்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

பாலாற்றின் கரையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம்  சூழ்ந்துள்ளது. இதனால் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News