செய்திகள்
கோப்புபடம்

மழைநீர் சேகரிப்புக்காக பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம் - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

Published On 2021-10-13 04:28 GMT   |   Update On 2021-10-13 04:28 GMT
வேலை உறுதி திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியுள்ளது.
உடுமலை:

வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் தலா 5 பண்ணைக் குட்டைகள் வீதம் ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உடுமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் என 72 ஊராட்சிகளில் 360 பண்ணைக் குட்டைகளை உடனடியாக அமைக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தலா 5 பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், குளம், குட்டை மற்றும் பொது இடங்களில் சிறு குழிகள் அமைத்து மழைநீரை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நிலத்தில் ஐந்து மீட்டர் நீளம் மற்றும் அகலம் 1.50 மீட்டர் ஆழத்தில் பண்ணைக்குட்டை அமைக்க ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் தேக்குவதன் வாயிலாக நிலத்தடி நீராதாரம் செறிவூட்டப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
Tags:    

Similar News