செய்திகள்
கோப்புபடம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயற்சி

Published On 2021-09-20 11:02 GMT   |   Update On 2021-09-20 11:02 GMT
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் தங்கள் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.

மேலப்பாளையம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா (வயது 25), கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து பாளை போலீசார் மீது நான் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்யப்போகிறேன் என்று வி‌ஷ பாட்டிலை எடுத்தார்.

உடனே போலீசார் வி‌ஷபாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் சோதனை செய்தபோது அவரது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த லைட்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று அவரது குறைகளை கூற வைத்தனர். அதன் பிறகு மீண்டும் அவரை வெளியே அழைத்து வந்து போக வலியுறுத்தினர்.

அப்போது திடீரென்று திருநங்கை கார்த்திக் என்ற சுவேதா, தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.

உடனடியாக போலீசார் விரைந்து சென்று திருநங்கையை பிடித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். மேலும் அவரை எச்சரிக்கை செய்ததால் உடனடியாக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மைதீன் ஞானியார் மற்றும் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் நாங்கள் ஒரு தனியார் பீடி கம்பெனி நிறுவனத்தில் வேலை பார்த்தோம். ஏராளமாக சம்பள பாக்கி உள்ளது. எங்களுக்கு உரிய பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

பாளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு பெட்டியில் ஒரு மனு போட்டனர்.

அதில், எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால், உடனடியாக அதை நிறைவேற்றி தர வேண்டும். இல்லாவிடில் நாங்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி உள்ளனர்.

பாளை அருகே உள்ள கீழதோனி துறை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நான்கு சக்கர தள்ளு வண்டியில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனக்கும் எனது உறவினர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் என்னை சரமாரியாக அடித்து நடக்க முடியாமல் ஆக்கிவிட்டார்கள்.

நான் சுயநினைவு இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததாக போலீசில் கூறி அவர்கள் தப்பித்து விட்டார்கள். எனக்கு சுயநினைவு திரும்பிய பிறகுதான் என்னை தாக்கியவர்கள் பற்றி நினைவு வந்தது எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்.ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News