செய்திகள்
கொலை

மயிலாப்பூர் வாலிபர் கொலையில் பிரபல ரவுடிக்கு தொடர்பு?

Published On 2021-09-15 11:07 GMT   |   Update On 2021-09-15 11:07 GMT
சென்னை மயிலாப்பூரில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

மயிலாப்பூர் மந்தைவெளி சந்து பகுதியில் வசித்து வந்தவர் உருளை கோபி.

34 வயதான இவர் நேற்று இரவு 10 மணியளவில் மயிலாப்பூர் அப்பு முதல் தெருவில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உருளை கோபியை சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் பலத்த காயம் அடைந்த கோபி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோபி உயிரிழந்தார்.

இந்த கொலையில் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எதிரியான இன்னொரு ரவுடிக்கு உருளை கோபி உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே உருளை கோபியை அந்த ரவுடி கொலை செய்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ரவுடியும், எதிர் தரப்பை சேர்ந்த இன்னொரு ரவுடியும் அடிக்கடி மயிலாப்பூர் பகுதியில் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர் தரப்பை சேர்ந்த ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் உருளை கோபியை கொலை செய்ததாக கருதப்படும் ரவுடியின் கூட்டாளி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது அவரது தாய் உருளை கோபியின் பெயரை குறிப்பிட்டு, தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன்’’ என்று சபதம் செய்ததாக கூறப்படுகிறது.

எனவே அந்த பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News