செய்திகள்
மனு அளிக்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்-போலீசார் அதிரடி சோதனை

Published On 2021-08-09 09:42 GMT   |   Update On 2021-08-09 09:42 GMT
கொரோனா காரணமாக தொலைபேசியில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தபடும் என அறிவித்திருந்தும் ஒரு சில பொதுமக்கள் அதனை அறியாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனுபெட்டி வைக்கப்பட்டு மனு வாங்கப்பட்டது. 

தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் கடந்த 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இதற்கென (0421-2969999) என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். 
மக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்ய விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. 

இந்தநிலையில் இன்று மனு அளிப்பதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கொரோனா காரணமாக தொலைபேசியில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தபடும் என அறிவித்திருந்தும் ஒரு சில பொதுமக்கள் அதனை அறியாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். 

இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு  ஏற்படுத்தி வரிசையில் நிற்க வைத்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்கள் மனு அளித்து விட்டு அங்கிருந்து செல்ல தொடர்ந்து அறிவுறுத்தினர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அதிரடி சோதனை நடத்தினர். முககவசம் அணிந்து வருகிறார்களா? யாராவது கையில் மண்எண்ணை கேன் உள்ளிட்டவற்றை எடுத்து வருகிறார்களா? என்று ஆய்வு செய்து அதன்பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர். 
 
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடம் கேட்டபோது, தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாமல் இருக்கிறது. தொலைபேசி வாயிலாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படுமா?  என்று தெரியவில்லை. அதனால் நேரிடையாக மனு கொடுக்க வந்துள்ளோம் என்றனர். 
Tags:    

Similar News