செய்திகள்
சென்னை ஐகோர்ட்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது

Published On 2021-07-31 08:47 GMT   |   Update On 2021-07-31 08:47 GMT
பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சென்னை:

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிக வரித்துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை தலைவர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வக்கீல் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Tags:    

Similar News