செய்திகள்
கொள்ளை

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வழிப்பறி-கொள்ளை

Published On 2021-07-29 10:58 GMT   |   Update On 2021-07-29 10:58 GMT
வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி ஆகியவை நடந்து வருவதால் விழுப்புரம் நகர் மற்றும் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரம்:

தமிழகத்தின் வடபகுதியின் முக்கிய நகரமாக விழுப்புரம் உள்ளது. இந்த வழியாகத்தான் தென் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சென்னைக்கு செல்கின்றன. எனவே விழுப்புரத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகம் காணப்படும்.

இவ்வாறு செல்லும் வாகனங்களை கடந்த சில நாட்களாக மர்மநபர்கள் வழிமறித்து பணம் பறித்து வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் விழுப்புரத்தில் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம், மயிலம், ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணிமுடிந்து இரவு நேரம் வீடு திரும்புகின்றனர்.

இவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் பணத்தை பறித்து வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் வழிப்பறிகளால் டாஸ்மாக் ஊழியர்கள் இரவு நேரத்தில் செல்வதற்கு பயப்படுகின்றனர்.

மேலும் கொள்ளையர்கள் கிராம பகுதிகளை நோட்டமிடுகின்றனர். பொதுவாக கிராமத்தில் உள்ள விவசாயிகள், 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் வீட்டு சாவியினை வெளி பகுதியில் வைத்து செல்வார்கள். இதனை பகல் நேரத்தில் கண்காணிக்கும் மர்ம கும்பல் அந்த சாவியினை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள்.

பின்னர் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. நேற்று மாலை விழுப்புரம் நகர் பகுதியில் உள்ள நாராயணன் நகரில் தனியார் ஆசிரியையிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்றுள்ளனர்.

இதுபோன்று தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி ஆகியவை நடந்து வருவதால் விழுப்புரம் நகர் மற்றும் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போலீசார் 3 மோட்டார் சைக்கிளில் மாவட்டம் முழுவதும் ரோந்து வந்தனர். அதேபோன்று தற்போதும் போலீசார் ரோந்துபணியை முடுக்கிவிடவேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News