செய்திகள்
கோப்புப்படம்

விதிகளை மீறும் ஆம்புலன்ஸ்களால் விபத்து அபாயம்

Published On 2021-07-01 08:22 GMT   |   Update On 2021-07-01 08:22 GMT
ஒரு சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வண்டியை கண்மூடித்தனமாக அதிக வேகத்தில் இயக்குகின்றனர்.
திருப்பூர்:

தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் எந்த அளவுக்கு பணியாற்றுகிறார்களோ அதேபோல ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பணியும் போற்றப்பட வேண்டியது. நோய்த்தொற்று பயத்தால் உறவினர்கள் கூட விலகியிருக்கும் நிலையில் இவர்கள் தான் களப்பணியாற்றுகிறார்கள். 

ஆனால் சமீப காலங்களாக ஒரு சிலர் செய்யும் தவறுகள் மொத்த ஆம்புலன்ஸ் ஓட்டிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக மாறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சமீப காலங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடையே தொழில் போட்டி உருவாகி வருகிறது. இதனால் ஒரு விபத்து நடக்கும்போது யார் முதலில் அந்த இடத்தை சென்றடைகிறார்களோ அவரே அந்த நோயாளியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தமாக உள்ளது.

இதனால் ஒரு சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வண்டியை கண்மூடித்தனமாக அதிக வேகத்தில் இயக்குகின்றனர். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே உயிர் காக்கும் பணிக்காக செல்லும் போதும் கண்டிப்பாக கட்டுப்பாடான வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.

பொதுவாக ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனையிடுவதில்லை என்ற அடிப்படையில் ஒருசிலர் அதன் மூலம் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் ஆம்புலன்சில் போதை வஸ்துக்களை கடத்திச் செல்வது, குற்றவாளிகள் தப்பி செல்ல பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. அந்தவகையில் குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் மூலம் மது வகைகளை கடத்தியவர்கள் சிக்கியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டிகளின் இதுபோன்ற தவறான செயல்கள் ஒட்டுமொத்த ஆம்புலன்சுகளையும் சோதனையிடும் நிலையை உருவாக்கினால் உயிரிழப்புகளுக்கு  காரணமாகி விடும்.

எனவே சக ஆம்புலன்ஸ் ஓட்டுனரோ, உரிமையாளரோ தவறு செய்வது தெரிய வந்தால் உடனடியாக மற்றவர்கள் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலமே குற்றங்களைத் தடுக்க முடியும் என்றனர். 
Tags:    

Similar News